பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கு 5 ஆண்டுகளுக்கு பின் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
புதுச்சேரி : புதுச்சேரியில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னேற்றம் இல்லாததால், வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி, அய்யங்குட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன்,49; இவர், கரசூர் பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். இந்நிலையில், புருஷோத்தமன் பெட்ரோல் பங்க்கில் இருந்து கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி இரவு வீடு திரும்பியபோது, ஊசுட்டேரி பகுதியில் மர்ம கும்பல்களால் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், 5 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரையில் புருஷோத்தமனை கொலை செய்யப்பட்ட வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், டி.ஜி.பி., ஷாலினி சிங் உத்தரவின்பேரில், பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கு, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரணை துவங்கியுள்ளனர். பெட்ரோல் பங்கு உரிமையாளர் கொலை வழக்கு விசாரணை 5 ஆண்டுகளுக்கு பின் சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்க மாற்றப்பட்டு, விசாரணை மீண்டும் துவங்கப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.