உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொங்கல் விழாவில் போலீஸ் தடியடி இன்ஸ்பெக்டர் சிறை பிடிப்பு புவனகிரி அருகே நள்ளிரவில் பரபரப்பு

பொங்கல் விழாவில் போலீஸ் தடியடி இன்ஸ்பெக்டர் சிறை பிடிப்பு புவனகிரி அருகே நள்ளிரவில் பரபரப்பு

புவனகிரி, : பொங்கல் விழா முடிய தாமதமானதால் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, இன்ஸ்பெக்டரை கிராம மக்கள் சிறை பிடித்த சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த மருதுார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஆலம்பாடி காலனியில் நேற்று முன்தினம் இரவு பொங்கல் விளையாட்டு விழா நடந்தது. அனுமதி நேரத்தை கடந்தும் விழா நீடித்தது.இதனால், இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார், மின்சாரத்தை துண்டித்தனர். அதனை அறியாத கிராம மக்கள் ஜெனரேட்டரை பயன்படுத்தி விழாவை தொடர்ந்தனர். உடன் போலீசார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர்.ஆத்திரமடைந்த கிராம மக்கள், புவனகிரி-மருதுார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் தடுக்க முயலவே இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்ஸ்பெக்டர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷமிட்டதோடு, அவரை சிறை பிடித்து மறியலை தொடர்ந்தனர்.தகவலறிந்த சிதம்பரம் டி.எஸ்.பி., லாமேக், அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை சமரசம் செய்து சிறைபிடிக்கப்பட்ட இன்ஸ்பெக்டரை விடுவித்து அழைத்து சென்றனர். இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் சிறை பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இது குறித்து வி.சி., மாவட்ட செயலாளர் தமிழொளி கூறுகையில்: அமைதியான முறையில் விழா நடந்தது. போலீஸ் அதிகாரிகள் சிலர் தேவையற்ற பிரச்னை செய்ததால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி இன்று, எஸ்.பி.,யை சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்றார்.இச்சம்பவம் தொடர்பாக போலீஸ்காரர் கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், அரும்பு,40; கன்னியப்பன்,40; சத்தியராஜ்,30; உள்ளிட்ட 10 பேர் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், போலீஸ் ஜீப் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது ஆகிய பிரிவுகளில் மருதுார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி