போலீசார் தீவிர வாகன சோதனை
புதுச்சேரி: கோரிமேடு எல்லையில் டி.நகர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே கடந்த சில நாட்களாக போலீசார், தங்களது போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் துணை ராணுவத்தினருடன் தினமும் கொடி அணிவகுப்பு நடத்தி வந்தனர். இந்நிலையில் சட்டசபை தேர்தல் தேதி நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. அதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையொட்டி மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி கோரிமேடு எல்லையில் டி. நகர் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக புதுச்சேரிக்கு வரும் வெளிமாநில வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டுவரப்படுகிறதா என, போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.