பதற்றமான ஓட்டு சாவடிகளில் அதிரடிப்படை குவிப்பு
புதுச்சேரி: பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியாக ஓட்டுப்பதிவு நடந்தது. தட்டாஞ்சாவடி தொகுதியில் ஓட்டுச்சாவடிகளில் கடந்த காலத் தேர்தல் சம்பவங்கள், கள நிலவரங்கள் மற்றும் உளவுத்துறை அளித்த ரகசிய அறிக்கைகளின் அடிப்படையில் 2 ஓட்டுச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. இந்த மையங்களில் ஓட்டுப்பதிவின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நேரிடாதவாறு தடுத்து, அமைதியை நிலைநாட்டத் தேர்தல் ஆணையம் சார்பில், முன்னெப்போதும் இல்லாத வகையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இரண்டு ஓட்டுச்சாவடி மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்புப் படைகளுடன் சேர்த்து, மத்திய அரசுப் பணியாளர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறப்பு நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஓட்டுசாவடிக்குள் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் அவர்கள் நேரடியாக கண்காணித்து உடனுக்குடன் அறிக்கை பதிவு செய்தனர். இதனால், வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளித்தனர்.