மரத்தில் கார் மோதி விபத்து: போலீசார் விசாரணை
பாகூர்: மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது குறித்து போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், காளாச்சேரி குடியான தெருவை சேர்ந்தவர் துரைராஜ் மகன் ஸ்ரீராம் 22; மளிகை கடை நடத்தி வருகிறர். இவர், கடந்த 2ம் தேதி புதுச்சேரிக்கு வந்துள்ளார். மறுநாள் அதிகாலை, பார்ச்யூனர் காரில் (டி.என். 52 ஒய் 5555) திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை பல்லவராயன் குடிக்காடு பகுதியை சேர்ந்த தேவா என்பவர் ஓட்டிச் சென்றார். அரியாங்குப்பம் அருகே சென்ற போது, தேவா துாக்க கலக்கத்தில் இருந்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மரம் வேறோடு சாய்ந்த நிலையில், அங்கு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு தள்ளுவண்டிகளும் சேதமானது. காயமடைந்த ஸ்ரீராம் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார், கார் டிரைவர் தேவா மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.