உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இளம் பெண் மர்ம சாவு போலீசார் விசாரணை

இளம் பெண் மர்ம சாவு போலீசார் விசாரணை

சின்னசேலம் : சின்னசேலம் அருகே இளம் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த திம்மாபுரம், வடக்கு காட்டுக்கொட்டகையை சேர்ந்தவர் செந்தில் மனைவி நிர்மலா,28; செந்தில் மூன்று ஆண்டிற்கு முன் இறந்து விட்ட நிலையில், நிர்மலா தனது இரு மகள்களுடன் வசித்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் 7 மணி அளவில் நாக்குப்பம் பால் சொசைட்டியில் பால் ஊற்ற சென்றவர், வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள், நிர்மலாவை தேடியபோது, நேற்று காலை 7 மணி அளவில் நிர்மலா வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள மக்காச்சோள வயலில் அவர் எடுத்துச் சென்ற பால் கேன் மற்றும் காய்கறிகள் சிதறி கிடந்தது. உள்ளே சென்று தேடியபோது, வயலின் நடுவில் உதட்டில் ரத்த காயத்துடன் நிர்மலா இறந்து கிடந்தார்.தகவலறிந்த எஸ்.பி., ரஜத்சதுர்வேதி, டி.எஸ்.பி., தேவராஜ் மற்றும் சின்னசேலம் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மோப்ப நாய் ராக்கி சம்பவ இடத்தில் இருந்து நாக்குப்பம் வரை சென்று திரும்பியது.பின்னர் நிர்மலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து, நிர்மலா கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்த பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ