மக்கள் தொகைக்கு ஏற்ப காவலர் பணியிடங்கள்: நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
புதுச்சேரி: புதுச்சேரி மக்கள் தொகைக்கு ஏற்ப, காவலர் பணியிடங்களை உருவாக்கி, சட்டம் ஒழுங்கினை பாதுகாத்திட வேண்டும் என, நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர், கவர்னர், முதல்வருக்கு அனுப்பி உள்ள மனு; மாநிலத்தில் நடந்து வரும் கொலைகள் மற்றும் சாலை விபத்துகளால் பலர் உயிரிழந்து வருதால், பொது மக்கள் பீதியில் உள்ளனர். காவல் துறைக்கு போதுமான பலம் இல்லாததால் இந்த சம்பவங்கள் நடந்தேறுவதாக தெரிகிறது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததாலும், அதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்காததாலும் இளைஞர்கள் தவறான பாதைக்கு சென்று போதை பழக்கத்திற்கு அடிமையாகி, சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. புதுச்சேரி மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமான காவலர் பணியிடங்களை உருவாக்காமல் இருப்பதால் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரச்னை ஏற்படும் இடங்களை கண்காணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. தற்போது உள்ள காவலர்கள் இரவு பகல் பாராமல் கூடுதல் நேரம் பணி செய்வதால், பணிசுமை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி உடல் நலம் பாதிக்கப்பட்டு விடுமுறையில் செல்வது தெரிகிறது. காவலர்கள் ரோந்து பணிக்கு செல்வதற்கான நவீன வாகனங்கள், அதற்கு தேவையான பெட்ரோல், டீசல் வழங்கப்படுவதில்லை. புதுச்சேரியில் மக்கள் தொகைக்கு ஏற்ப போதிய காவலர் பணியிடங்களை உருவாக்கி, மக்கள் பீதியடையாமல் காத்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.