கூலி தொழிலாளி சாவு போலீசார் விசாரணை
பாகூர்: கிருமாம்பாக்கம் அடுத்த மூர்த்திக்குப்பம், பழைய பேட் பகுதியை சேர்ந்தவர் ராஜு 46; கூலி தொழிலாளி. இவரது மனைவி சத்தியா, 43; இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ராஜுவுக்கு, மது குடிப்பழக்கம் இருந்ததால், சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன், அப்பகுதியில் நடந்த துக்க நிகழ்விற்கு சென்ற போது, அவருக்கு வலிப்பு ஏற்பட்டு விழுந்ததில், பின் தலையில் அடிப்பட்டது. அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காயம் ஆராமல் இருந்ததால், கடந்த 24ம் தேதி புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை பார்த்து மருந்து மாத்திரைகளை வாங்கி வந்தார். ஆனாலும், தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். கடந்த 25ம் தேதி அதிகாலை அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே, அவரை கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, முதலுதவி சிகிச்சைக்கு பின், அவரை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.