3 பேரிடம் ரூ.1.15 லட்சம் அபேஸ் போலீசார் விசாரணை
புதுச்சேரி : சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் பெண் உட்பட 3 பேர் ரூ.1.15 லட்சம் இழந்துள்ளனர்.தட்டாஞ்சாவடியை சேர்ந்த நபரை 'வாட்ஸ் ஆப்' மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், கேரளா லாட்டரியில் 5 லட்சம் ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, லாட்டரி பரிசு பணத்தை பெற முன்பணம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளார். இதைநம்பி, 17 ஆயிரத்து 620 ரூபாய் மர்ம நபருக்கு அனுப்பி ஏமாந்தார்.சேதராப்பட்டை சேர்ந்த பெண் ஒருவரை, தொடர்பு கொண்ட மர்ம நபர், வங்கி அதிகாரி போல் பேசி கிரெடிட் கார்டு விவரம் மற்றும் ஓடிபி கேட்டார். அதனை நம்பி, அப்பெண்ணும் கிரெடிட் கார்டு மற்றும் ஓ.டி.பி., வழங்கினார். அதன்பின் சிறிது நேரத்தில் அவரது கணக்கில் இருந்து 64 ஆயிரத்து 427 ரூபாயை மர்ம நபர் எடுத்து ஏமாற்றியுள்ளார்.இதேபோல், உருளையன்பேட்டையை சேர்ந்த ஆண் நபர் 33 ஆயிரம் என, 3 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 47 ரூபாய் இழந்தனர். இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.