மணல் திருட்டை தடுக்க போலீஸ் பாதுகாப்பு
சங்கராபரணி ஆற்றில் மணல் திருட்டு புகாரை தொடர்ந்து, செல்லிப்பட்டு பகுதியில் போலீசார் இரவு நேரங்களில் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.திருபுவனை தொகுதி, செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றுப்படுகை மற்றும் அருகில் உள்ள விவசாய நிலங்களில் செங்கல் சூளை அமைத்து, அதன் மூலம் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடந்து வருவதாக போலீசார் மற்றும் வருவாய் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன.இதையடுத்து, எஸ்.பி., வம்சித ரெட்டி உத்தரவின் பேரில், திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியா தலைமையில் மணல் திருட்டை தடுக்கும் பொருட்டு, கடந்த சில தினங்களாக தினமும் இரவு 8:00 மணி முதல் மறுநாள் காலை 8:00 மணி வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், சங்கராபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள விவசாய நில உரிமையாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தவும் போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர். இருப்பினும், கண்டமங்கலம் மற்றும் வில்லியனுார் போலீசார், வருவாய்த்துறையினர் ஒத்துழைப்பு அளித்ததால் மட்டுமே மணல் திருட்டை முழுமையாக தடுக்க முடியும் என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.