போலீசார் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்: அன்பழகன்
புதுச்சேரி : புதுச்சேரி அரசு கொண்டு வந்துள்ள திறந்தவெளி விளம்பரங்கள் தடை சட்டத்தை பாகுபாடின்றி நடைமுறைப்படுத்த அதிகாரிகள் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை: புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களுக்கு கடந்த தி.மு.க., - காங்., கூட்டணி அரசில் முதல்வராக இருந்த நாராயணசாமிதான் அனுமதி கொடுத்தார். அவர் தற்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரெஸ்ட்டோ பார்களை அகற்ற நடவடிக்கை எடுப்போம் என்கிறார். இதுவே அவரது இரட்டை வேடத்திற்கு சான்றாகும். அவருக்கு, மக்கள் மீது அக்கறை இருந்தால், காங்., கட்சியினர் நடத்தும் ரெஸ்டோ பார் உரிமைகங்களை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். கொலை சம்பவத்தை தொடர்ந்து, விதிகளை மீறிய 10க்கும் மேற்பட்ட டெஸ்டோபர்கள் மீது கலால் துறையினர் நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டிற்குரியது. அரசின் சட்ட திட்டங்களை, அதிகாரிகள் முறையாக செயல்படுத்தினாலே, பல குற்றங்களை தடுக்க முடியும். அதனை தவிர்த்து, ஆட்சியாளர்களின் சட்ட விரோத உத்தரவுகளை அமுல்படுத்தினால், இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும். போலீஸ் துறையின் கையில், மாநிலத்தின் எதிர்காலம் உள்ளது என்பதை அதிகாரிகள் மறந்துவிடக்கூடாது. சட்டம் ஒழுங்கை காப்பத்தில் போலீசார் விழிப்போடு இருந்தால் தான் மக்கள் நிம்மதியாக வாழும் நிலை ஏற்படும். பல்வேறு விஷயங்களில் தற்பொழுதுள்ள சட்ட திட்டங்களை பொதுமக்களும், வியாபாரிகளும் மதித்து நடக்க போலீசாரின் நடவடிக்கை பாகுபாடின்றி இருக்க வேண்டும். புதுச்சேரி அரசு கொண்டு வந்துள்ள திறந்தவெளி விளம்பரங்கள் தடை சட்டத்தை பாகுபாடின்றி நடைமுறைப்படுத்த அதிகாரிகள் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.