முதுநிலை மாணவர் சேர்க்கை தீர்ப்பு; மேல் முறையீடு செய்ய வலியுறுத்தல்
புதுச்சேரி; முதுநிலை மாணவர் சேர்க்கை குறித்து வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு புதுச்சேரி அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என, புதுச்சேரி மாநில மாணவர், பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலா வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளை சுப்ரீம் கோர்ட் திருத்தி உள்ளது. சுப்ரீம் கோர்ட் வழிமுறைப்படி முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை புதுச்சேரி, தமிழக அரசுகளால் அந்தந்த மாநில மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடுகள் மாற்றியமைக்கப்படுகிறது. அடுத்த கல்வியாண்டில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை அகில இந்திய மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் எனத் தெரிகிறது. நடப்பு கல்வியாண்டில் புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சென்டாக் மூலமாக 2ம் கட்ட கலந்தாய்வுகள் முடிந்துள்ளது. தொடர்ந்து 3,4,5 மற்றும் சிறப்பு கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். அடுத்த கல்வியாண்டில் மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு, மத்திய அரசின் மருத்துவ மாணவர் சேர்க்கை கமிட்டி மூலம் நடைபெறும். இதன் மூலமாக மாநில, யூனியன் பிரதேசத்தில் உள்ள மாணவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து புதுச்சேரி மாணவர்களின் நலனை காக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.