உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாயுமானவர் திட்டம் விஜயகாந்தின் கனவு முதல்வருக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா

தாயுமானவர் திட்டம் விஜயகாந்தின் கனவு முதல்வருக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா

திருக்கோவிலுார்: விஜயகாந்த் கண்ட கனவு திட்டத்தை செயல்படுத்திய தமிழக முதல்வருக்கு நன்றி என, தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதியில் 'உள்ளம் தேடி, இல்லம் நாடி, என்ற பெயரில் தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, ஜி.அரியூரில் பிரேமலதா பேசியதாவது; ரிஷிவந்தியம் தொகுதி விஜயகாந்த் வென்றெடுத்த தொகுதி. இது கேப்டனின் கோட்டை. இன்று 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' என்ற கோஷத்துடன் உங்களை தேடி வந்திருக்கிறேன். இதேபோல் தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் சென்று நிர்வாகிகள், தொண்டர்களை சந்திக்க உள்ளேன். விஜயகாந்துடன் நான் போகாத ஊரில்லை. ஆனால் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை சென்றபோது ஒரு உண்மை தெரிந்தது. அது விஜயகாந்தின் கோட்டை என்று. நாம் வென்றெடுத்த தொகுதிகள் அனைத்தையும் மீண்டும் வென்றெடுத்து, அந்த வெற்றிக் கனிகளை கேப்டன் ஆலயத்தில் வைப்பதுதான் கேப்டனுக்கு நாம் செய்யும் நன்றியாகும். நீங்கள் எல்லோரும் விரும்பும் கூட்டணி இந்த முறை அமைப்போம். நிச்சயமாக நாம் போட்டியிடும் அனைத்து தொகுதிகளையும் வென்றெடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. நீங்களும் நம்பிக்கையுடன் இருங்கள். முதல்வரின் தாயுமானவர் திட்டம் மூலம் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இத்திட்டம் விஜயகாந்த் கண்ட கனவு திட்டம். இது எப்படி சாத்தியம் என்று அன்று எல்லோரும் கேலி செய்தார்கள். இன்று முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இது விஜயகாந்துக்கு கிடைத்த வெற்றி. அதற்காக தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் தே.மு.தி.க., சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு பிரேமலதா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை