உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் துவங்கியது ...: ஓட்டுச்சாவடிகளை அதிகரிக்க முடிவு

சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் துவங்கியது ...: ஓட்டுச்சாவடிகளை அதிகரிக்க முடிவு

புதுச்சேரி: சட்டசபை தேர்தலுக்கான முன் ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.ஓட்டுச்சாவடிகளில் எண்ணிக்கை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. தீவிர உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகின்றன. ஏற்பாடுகள் ஜோர் மற்றொரு பக்கம், சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் இறங்கி உள்ளது. அதன் முக்கிய கட்டமாக 30 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகள், உதவி வாக்காளர் பதவி நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தற்போது நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல், இடமாற்றம் உள்ளிட்ட பணிகளை விரைவில் மேற்கொள்ள உள்ளனர். சப் கலெக்டர்கள், துறை இயக்குநர்கள், நகராட்சி ஆணையர்கள், வாட்டார வளர்ச்சி அதிகாரி, துணை போக்குவரத்து ஆணையர் நிலையில் உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்னர். மேலும் தேர்தல் ஆணை யம் வாக்காளர் பட்டியல் திருத்தம், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடி அதிகரிப்பு கடந்த லோக்சபா தேர்தலில், 1,500 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டன. இந்த முறை அனைத்து வாக்காளர்களும் ஓட்டளிக்க நேரம் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால், 1,200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி வீதம் பிரிக்க, ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ஓட்டுச்சாவடிகளை பிரித்தால், ஒவ்வொரு தொகுதிக்கும் கூடுதலாக எத்தனை இடங்களில் ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டும். ஓட்டுச்சாவடிகள் அமைக்க போதுமான பள்ளி வகுப்பறைகள் உள்ளனவா, ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக எத்தனை ஓட்டுச்சாவடிகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அரசு அதிகாரிகள் சேகரிக்கத் துவங்கி உள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில் 962 ஓட்டுச்சாவடிகள் இருந்த நிலையில், இந்தாண்டு ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை 1,000 மேல் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய மாற்றம் வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் ஈடுபடும் வாக்காளர் பதிவு அதிகாரிகள், உதவி பதிவு அதிகாரிகள் தான் அந்தந்த தொகுதிக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருக்கின்றனர். இந்த முறை தேர்தல் நடத்தும் அதிகாரி நியமனத்தில் புதிய மாற்றத்தை தேர்தல் ஆணையம் புகுத்தியுள்ளது. கடந்த கால சட்டசபை தேர்தல்களில் மூன்று தொகுதிகளுக்கு ஒரு தேர்தல் நடத்தும் அதிகாரி நியமிக்கப்பட்டு இருந்தனர். வரும் தேர்தலில் இரு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு தேர்தல் நடத்தும் அதிகாரி நியக்கப்பட்டுள்ளார். நெட்டப்பாக்கம் (தனி) தொகுதியில் மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநர், நிரவி டி.ஆர் பட்டினம் தொகுதிக்கு காரைக்கால் வளர்ச்சி அதிகாரி ஆகியோர் தனி தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய வாய்ப்பு இதேபோல், புதிய துறை இயக்குநர்கள் தேர்தல் நடத்தும் வாய்ப்பினையும் தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநர், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டு, சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேவேளையில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்த கூட்டுறவு பதிவாளர் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை