| ADDED : நவ 13, 2025 06:48 AM
புதுச்சேரி: ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரியில் கடந்த 4ம் தேதி முதல் ஓட்டுச்சாவடி அலுவலகர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி வருகின்றனர். விடுபட்ட வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த ஊழியர்கள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தங்களின் களப்பணியில் பல்வேறு இடர்பாடுகளை சந்திப்பதாக தெரிவித்துள்ளனர். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தாலோ அல்லது இடையூறு செய்தாலோ 2023 சட்டம் 221ம் பிரிவின்படி 3 மாத சிறை தண்டனை அல்லது ரூ. 2,500 அபராதம் விதிக்கப்படும். எனவே, வாக்காளர்கள், அரசியல் கட்சியினர் தங்கள் பகுதிகளுக்கு வரும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.