ஓவியப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி அரசு தொடக்கப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஓவிய போட்டி நடத்தப்பட்டது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர். ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா மற்றும் உல்லாஸ் திட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் கீதா வரவேற்றார். வட்டம் -1 பள்ளி துணை ஆய்வாளர் அனிதா தலைமை தாங்கினார். புதுச்சேரி ஹெரிடேஜ் லேடீஸ் சர்க்கிள்-187 தலைவி புவனேஸ்வரி, சங்கீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.ஓவியப்போட்டியில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று மாணவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் உல்லாஸ் கல்வி திட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. உல்லாஸ் திட்டத்தின் தன்னார்வல ஆசிரியர்கள் நித்யா, மாரியம்மா கவுரவிக்கப்பட்டனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.