புதுச்சேரி - கண்ணுார் இடையே விமான சேவை தொடங்க ஆலோசனை
புதுச்சேரி: புதுச்சேரி- கண்ணுார் இடையே விமான சேவை தொடங்க சாத்திய கூறுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.அமைச்சர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். மாகே தொகுதி எம்.எல்.ஏ., ரமேஷ் பரம்பத், கண்ணுார் விமான நிலைய மேலாண் இயக்குனர் தினேஷ்குமார், சீனியர் மேலாளர் அஜய்குமார், சி.ஓ.ஓ., அஸ்வினிகுமார், புதுச்சேரி விமான நிலைய சீனியர் மேலாளர் ராஜேஷ் சோப்ரா மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், புதுச்சேரி- கண்ணுார் இடையே விமான சேவை தொடக்கம் தொடர்பான சாத்திய கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. புதுச்சேரி- கண்ணுார், புதுச்சேரி- திருப்பதி இடையேயான விமான சேவையை மேற்கொள்ள தேவையான சாத்திய கூறுகளை, இந்திய விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் இண்டிகோ நிறுவன ஒருங்கிணைப்புடன் ஆராயுமாறு சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.மேலும், இந்த விமான சேவை தொடக்கம் சம்பந்தமாக இந்திய விமான போக்குவரத்து ஆணையத்திற்கு, இண்டிகோ நிறுவனத்துடனான சாத்திய கூறுகளை தரவுகளுடன் கடிதம் எழுதவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.முன்னதாக, இண்டிகோ நிறுவன முதுநிலை துணைத் தலைவர் ராஜத் குமாருடன், இது தொடர்பாக அமைச்சர் கலந்தாலோசித்தார்.