போக்குவரத்து போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
புதுச்சேரி: போக்குவரத்து போலீசாரிடம் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்களில் டிராபிக் ஜாம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இந்திரா சிக்னலில் பழுதான டிராபிக் சிக்னல் விளக்குகளை சரிசெய்யவில்லை. தினசரி போக்குவரத்து போலீசார் டார்கெட் முடிக்க ஆங்காங்கே திடீர் அபராத வசூலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.நேற்று மாலை இ.சி.ஆர்., லதா ஸ்டீல் அருகே வடக்கு போக்குவரத்து போலீசார், வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி ஒரு வழி பாதையில் வந்த பைக்குகளை மடக்கி அபராதம் விதித்தனர். அதே நேரம் ஒரு வழிப்பாதையில் வந்த பல அரசியல் பிரமுகர்கள், ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்காமல் அனுப்பி வைத்தனர்.இதனை பார்த்த பொதுமக்கள் பைக் ஓட்டி வரும் கூலி தொழிலாளர்களுக்கு ஒரு சட்டம், ஆட்டோக்களுக்கு ஒரு சட்டமா என கடும் வாக்குவாத்தில் ஈடுப்பட்டனர். இதனை கண்டுகொள்ளாமல் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து கொண்டிருந்தனர். தங்களின் 50 பேருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்ற டார்க்கெட் முடிந்ததும், அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். கட்டட தொழிலாளியிடம்
கட்டட வேலை செய்து விட்டு வந்த தம்பதியிடம், போக்குவரத்து போலீசார் ரூ. 500 அபராதம் வசூலித்தனர். ஒரு நாளைக்கு கட்டட வேலை செய்யும் பெண் தொழிலாளிக்கு ரூ. 700 தான் சம்பளம். அதில் ரூ. 500 அபராதமாக வசூலித்து கொண்டனர் என, அப்பெண் கண்கலங்கி கூறினார்.