அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதி
பாகூர் : மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் புதிதாக உருவான குடியிருப்பு பகுதிகளில் தார் சாலை, கழிவு நீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாகூர் தொகுதி, மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தார் சாலை, குடிநீர், தெருமின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் புதிதாக உருவான அண்ணாமலை நகர் மற்றும் அதனையொட்டி உள்ள குடியிருப்பு பகுதியில் தற்போது ஏராளமானோர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள உட்புற வீதிகளில் தார் சாலை, கழிவு நீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படாமல் உள்ளது.மழை காலங்களில் மழை நீர் வெளியேற வழியின்றி சாலையிலேயே தேங்கி நின்று சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இப்பகுதியின் நிலப் பரப்பு மணல் பாங்காய் இருப்பதால், அவ்வழியாக வாகனங்களில் செல்வோர் நிலை தவறி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் புதிய குடியிருப்பு பகுதியில் தார் சாலை, கழிவு நீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.