| ADDED : செப் 17, 2011 01:22 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, வன்முறைகளைத் தடுக்க வலியுறுத்தி பள்ளி மாணவர், ஸ்கேட்டிங் செய்தபடி சிலம்பம் சுற்றி நகர் வலம் வந்தார்.புதுச்சேரி, திருவள்ளுவர் நகர் துலுக்காணத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தனராஜ் மகன் திருக்குமரன். நாவலர் நெடுஞ்செழியன் மேனிலைப்பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். குழு கலை நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனை புரிந்துள்ள திருக்குமரனுக்கு, புதுச்சேரியில் அதிகரித்துள்ள வன்முறைகள் தாக்கத்தை ஏற்படுத்தியது. இளைய தலைமுறையினரிடம் வன்முறை பரவலைத் தடுக்க வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டார். அதிகரித்தும் வரும் கொலை, கொள்ளை சம்பவங்களைத் தடுக்க வலியுறுத்தி நேற்று புதுச்சேரி வீதிகளில் ஸ்கேடிங் செய்தபடி நகர் வலம் வந்தார். இடை இடையே சிலம்பம் சுற்றியப்படி துண்டு பிரசுரங்களை வினியோகித்து வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்க அறைகூவல் விடுத்தார். கத்தி, வீச்சரிவாள் போன்ற வன்முறை ஆயுதங்களை உடலில் பொருத்தி கொண்டு திருக்குமரன் காயக்கட்டுகளுடன் புதுச்சேரி வீதிகளில் ஸ்கேட்டிங் செய்ததை கண்டு பொதுமக்கள் ஆச்சர்யப்பட்டனர்நிகழ்ச்சியில் அரசு கொறடா நேரு, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., கன்சிராம் பகுஜன் சமாஜ் தலைவர் தங்ககலைமாறன், தமிழ்ச் சங்க தலைவர் முத்து, விவேகானந்தா கோச்சிங் சென்டர் நிர்வாகி வி.வி.சி., நாகராஜ், வடக்கு கிழக்கு மாவட்ட தே.மு.தி.க., செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.