| ADDED : டிச 08, 2025 05:17 AM
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகம், ஜெர்மனியின் பசாவ் பல்கலைக்கழகத்துடன் சர்வதேச ஒத்துழைப்பிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. நிகழ்ச்சியில், பிரெஞ்சு துறைத் தலைவர் சர்மிளா அஷரிப் வரவேற்றார். துணை வேந்தர் பிரகாஷ்பாபு தலைமை தாங்கி, பேசுகையில், 'இந்தியா - ஜெர்மனி' கல்வி பரிமாற்றத்தை முன்னேற்றும் இந்த ஒத்துழைப்பு, அறிவு சார்ந்த ஒரு வலுவான சர்வதேச கூட்டுறவின் அடித்தளத்தை அமைக்கிறது. பல்வேறு துறைகளில் மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்றத்தையும், கூட்டு கல்வியை வலுப்படுத்துவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகளாவிய கல்வி இணைப்புகளை வலுப்படுத்த இந்த ஒப்பந்தம் முக்கிய பங்காற்றும்' என்றார். ஆன் லைனில் இணைந்த பசாவ் பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான துணை தலைவர் மரீனா ஓர்ட்ரூட் ஹெர்ட்ராம்ப், இந்த ஒப்பந்தம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பணிசார்ந்த வாய்ப்புகளை ஏற்படுத்தும் என, குறிப்பிட்டார். பசாவ் பல்கலைக்கழக ஒப்பந்தப் பொறுப்பாளர் லுாயிசே ஹெர்ட்விக், புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் சர்வதேச தொடர்பு இயக்குநர் விக்டர் ஆனந்த்குமார், பிரெஞ்சு துறை பேராசிரியர் ஜெயபால் ஷர்மிலி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை பட்டியலிட்டனர். இந்த ஒப்பந்தம் மூலம், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கல்வித் திட்டங்கள் மற்றும் பரிமாற்றங்கள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. மேலும் பணி முகங்கள், இணையவழி கருத்தரங்குகள், மாநாடுகள் உள்ளிட்ட கூட்டு கல்வி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தற்போது பிரெஞ்சு பல்கலைக் கழகங்களுடன் 8 செயற்பாட்டிலுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கொண்டிருக்கும் பிரெஞ்சு துறை, முதல் முறையாக ஜெர்மன் பல்கலைக்கழகத்துடன் கல்வி ஒத்துழைப்பிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில், இரு பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள், பிரதிநிதிகள், நிர்வாகிகள்,பிரெஞ்சு துறையின் மாணவர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.