புதுச்சேரி தேர்வர்கள் வெளி மாநிலங்களுக்கு பயணம்
புதுச்சேரி : ஜிப்மரில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கான தேர்விற்கு, புதுச்சேரியை சேர்ந்த ஆயிரக்கணக்கான தேர்வர்கள் நேற்று பிற மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்றனர். தேசிய அளவில் உள்ள 17 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர், டில்லி இ.எஸ்.ஐ.சி., மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 3,500 செவிலியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு நாளை நாடு முழுதும் நடக்கிறது. ஜிப்மர் மருத்துவமனைக்கான தேர்வை, ஜிப்மர் நிர்வாகமே நடத்தி வந்த நிலையில், இந்தாண்டு தேர்வு பணி எய்ம்ஸ் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள 450 காலி பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு மையங்கள் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், புதுச்சேரியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் நாளைய தேர்விற்காக நேற்று தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் புறப்பட்டு சென்றனர். ஹைதராபாத் மையத்தில் தேர்வு எழுதவுள்ள புதுச்சேரி தேர்வர்கள் கடச்குடா எகஸ்பிரஸ் ரயில், இண்டிகோ விமானம் மற்றும் பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.