உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்த வலியுறுத்தல்

மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்த வலியுறுத்தல்

புதுச்சேரி : இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கையை நடத்த வேண்டும் என புதுச்சேரி மாணவர், பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து நலச்சங்க தலைவர் பாலா வெளியிட்டுள்ளஅறிக்கை: தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் தங்கள் அளவிலேயே நுழைவுத் தேர்வு நடத்தி எம்.பி. பி.எஸ்., இடங்களை நிரப்பிக் கொள்ளலாம் என அகில இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.இந்த செயல் மாணவர்களை மேலும் வஞ்சிப்பதாக உள்ளது. இது தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வணிக ரீதியான செயல்பாட்டுக்கு அரசே உதவி புரிவது போல் இருக்கிறது.அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் இந்த முடிவால் பிளஸ் 2 வகுப்பில் நன்றாக படித்து தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் கூட மீண்டும் நுழைவுத் தேர்வுக்காக படிக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.

வறுமை நிலையிலும், போதிய அடிப்படை வசதி இல்லாத பள்ளிகளில் பயின்று வரும் கிராமப்புற மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வு முடிவால் பெரிதும் பாதிக்கப்படுவர். சமுதாயத்தில் அடித்தட்டு மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் அரசின் நோக்கத்தை இந்த நுழைவுத் தேர்வுமுறை சீர்குலைந்து விடும்.எனவே, மத்திய, மாநில அரசுகள் இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை நடத்துவதை ரத்து செய்துவிட்டு, மதிப்பெண்கள் அடிப்படையிலேயே சேர்க்கையை நடத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கை கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்