உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு... திடீர் அழைப்பு; ரூ.3,500 கோடி சிறப்பு நிதி கிடைக்கும்

புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு... திடீர் அழைப்பு; ரூ.3,500 கோடி சிறப்பு நிதி கிடைக்கும்

புதுச்சேரி: ரேஷன் கடை திறப்பிற்கு பச்சை கொடி காட்டிய மத்திய அரசு, அடுத்து, புதுச்சேரி அரசு கேட்டசிறப்பு நிதி தொடர்பாக விவாதிக்க அழைப்பு விடுத்துள்ளது.புதுச்சேரியில் என். ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி முடிய இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இருப்பினும், கவர்னர், அரசு அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் அறிவித்த திட்டங்களுக்கு நிதி கிடைப்பதிலும், காலத்தோடு செயல்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, புதுச்சேரி சட்டசபை கட்டுதல், விமான நிலையம் விரிவாக்கம், தொழிற்பூங்கா என பல திட்டங்கள் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. கவர்னர் கைலாஷ்நாதன் பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு நலத்திட்டங்களுக்கும் முட்டு கட்டைகளுக்கான முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு வருகின்றன. அண்மையில் கூட ரேஷன் கடைகளை திறக்க பல ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி கிடைத்தது.இருப்பினும், நீண்ட கால திட்டங்களுக்கு கேட்ட சிறப்பு நிதி தொடர்பாக முடிவெடுக்காமல் இருந்த நிலையில், அந்த சிறப்பு நிதி தொடர்பாக விவாதிக்க வரும் 21ம் தேதி டில்லி வருமாறு புதுச்சேரி அழைப்பு விடுத்துள்ளது. எனவே இக்கூட்டத்தில் பங்கேற்க தலைமை செயலர் சரத் சவுகான் தலைமையில் புதுச்சேரி அதிகாரிகள் விரைவில் டில்லி புறப்பட்டு செல்கின்றனர். புதுச்சேரி உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 5828 கோடி தேவைப்படுகிறது. குறிப்பாக ஏர்போர்ட் விரிவாக்கத்துக்கு ரூ. 3925 கோடி, சட்டசபை கட்ட ரூ. 420 கோடி, சுகாதாரத்துறை உட்கட்டமைப்பு மேம்படுத்த ரூ. 500 கோடி, மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க ரூ. 500 கோடி, தேசிய சட்டப்பல்கலைக்கழகம் அமைக்க ரூ. 483 கோடி தேவைப்படுகிறது. இது தொடர்பாக விரிவான அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி வந்த மத்திய உள்துறை செயலரிடம் நேரடியாகவே முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தி இருந்தார்.இதேபோல், குடிநீர், கழிவு நீர், சுகாதாரம், சாலை இணைப்பு என புதுச்சேரியின் ஒருங்கிணைந்த நகர்புற வாழ்வாதார மேம்பாடு திட்டங்கள் 4,750 கோடி ரூபாய் செலவில் ஆசிய வங்கி வங்கி மூலம் இரண்டு கட்டமாக வெளிப்பற நிதியுதவி திட்டத்தின் கீழ் செயல்படுத்த புதுச்சேரி அரசு உத்தேசித்துள்ளது. இத்திட்டம் 90க்கு 10 என்ற கடன் சுமையின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2025-26ம் நிதியாண்டில் 500 கோடி கிடைக்க வேண்டும். இந்த திட்டத்திற்கு ஆசிய வங்கியில் கடன் வாங்கி கொள்ள கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது. எனவே இது தொடர்பாக புதுச்சேரி அரசுடன் மத்திய அரசு அதிகாரிகள் விவாதிக்க உள்ளனர். இந்த கூட்டத்தின் மூலம் மொத்தம் ரூ.3,500 கோடி அளவிற்கு சிறப்பு நிதி பெறுவதற்கான கடன் அனுமதி மத்திய அரசிடம் கிடைக்கும். மாநில வளர்ச்சியும் அடுத்த கட்டத்திற்கு நகரும் என புதுச்சேரி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

புதுச்சேரி நாடுவது ஏன்?

புதுச்சேரியின் உள்கட்டமைப்பினை மறுசீரமைப்பு செய்ய 3,500 கோடி ரூபாய் மேல் திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஹட்கோ, நபார்டு வங்கி மூலம் கடனுதவி பெற்று பல்வேறு உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த வங்கிகளை காட்டிலும் ஆசிய வங்கி மூலம் கடன் பெற புதுச்சேரி அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இது தொடர்பாக அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறுகையில், மற்ற வங்கிகளை காட்டிலும் ஆசிய வங்கி வட்டி குறைவு. அத்துடன் 50 ஆண்டுகளுக்கு பிறகு கடனுதவியை செலுத்தலாம். இதன் காரணமாகவே ஆசிய வங்கியை புதுச்சேரி அரசு தேர்வுசெய்கிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை