பின்வாசல் பணி நியமனம் புதுச்சேரி அரசு அதிரடி தடை
புதுச்சேரி: புதுச்சேரியில் எந்த ஆட்சி நடந்தாலும், கொல்லைப்புற பணி நியமனம் தொடர்கதை. கட்சிக்காரர்கள், அவர்கள் ஆதரவாளர்களுக்கு அரசு பணிகளை வாரி வழங்குவர். இந்நிலையில், புதுச்சேரி அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளில் கொல்லைப்புற நியமனங்கள் செய்ய தடை விதித்து, நிர்வாக சீர்திருத்த துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. புதுச்சேரியில் பொதுப்பணி நியமனங்கள் அனைத்தும், அரசியலமைப்பு சட்டத்தின் படியும், ந டைமுறையில் உள்ள பணி விதிகளின் படியும் மட்டுமே மேற்கொள்ள, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. விதிமுறைகளை மீறி மேற்கொள்ளப்படும் எந்தவொரு கொல்லைப்புற நியமனங்களையும், நிரந்தரமாக்கலையும் ஏற்க முடியாது என, நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. புதுச்சேரி அரசின் அனைத்து பொதுப்பணி நியமனங்களும் முறையாக அறிவிக்கப்பட்ட பணி விதிகளின்படியும், அரசியலமைப்பு சட்டத்தின்படியும் மட்டுமே நடைபெற வேண்டும். முறைகேடான நியமனங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறப் பட்டுள்ளது.