ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும் : அன்பழகன் வலியுறுத்தல்
புதுச்சேரி : 'ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கல்காரர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அன்பழகன் எம்.எல்.ஏ., கூறினார். சட்டசபையில் அன்பழகன் எழுப்பிய கேள்வி நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. அன்பழகன்: அரிசி கடத்தல், பதுக்கல்காரர்கள் மீது புதுச்சேரி அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் என்ன? முதல்வர் ரங்கசாமி: ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகியவற்றில் ஈடுபடுவர்கள் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. மேலும், சந்தேகப்படும் நபர்களை கண்கணித்தல் மற்றும் எல்லைப் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அன்பழகன்: இலவச அரிசி வழங்குவதற்காக மத்திய, மாநில அரசுகள் கோடிக்கணக்கான ரூபாயை மான்யமாக வழங்குகின்றன. ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது தமிழகத்தில் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதுபோல புதுச்சேரியிலும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிசி கடத்துபவர்கள், ஆட்சியாளர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பேனர் வைக்கின்றனர். தமிழகத்தில் இருந்து போலீசார் இங்கே வந்து கடத்தல்காரர்களை பிடிக்கின்றனர். இங்கே பிடிப்பது யார்? (அப்போது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து ஆட்சேபணை தெரிவித்ததால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது) லட்சுமிநாராயணன்: புதுச்சேரியில் வழக்கு போடுகிறோம். ஆனால் அரிசி பதுக்கல் தொடர்ந்து நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் ரங்கசாமி: அரசு தக்க நடவடிக்கை எடுக்கும். அன்பழகன்: கடத்தல்காரர்களையும், பதுக்கல்காரர்களையும் பாதுகாக்கும் அரசாக உள்ளது.முதல்வர் ரங்கசாமி: தவறு செய்யும் யாருக்கும் எங்கள் அரசு துணை போகாது.