உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை: ரங்கசாமி உறுதி

பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை: ரங்கசாமி உறுதி

புதுச்சேரி : பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி கூறினார். சட்டசபையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தின் போது நமச்சிவாயம் எம்.எல்.ஏ., பேசுகையில், 'இந்த அரசு பொறுப்பேற்றதும், 4000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டது. இதற்கு முன் இருந்த எந்த அரசும் இதுபோல் செய்ததில்லை. கடந்த காலத்தில் நேரடியாக ஊழியர்களைப் பணியமர்த்தும் வழக்கத்தை உருவாக்கியதே தற்போதைய முதல்வர்தான்' என்றார். அமைச்சர் ராஜவேலு:புதிதாக பணியிடங்களை உருவாக்கி, தகுதி அடிப்படையில், முறையான ஆணை வழங்கி அவர்கள் பணியமர்த்தப்பட்டார்களா. நமச்சிவாயம்: தவறான முறையில் பணியமர்த்தவில்லை. வைக்க வேண்டிய வழிமுறைப்படி, தலைமைச் செயலருடன் ஆலோசனை பெற்றுதான் வேலைக்கு வைத்தோம். கடந்த ஆட்சியில் நூற்றுக் கணக்கான ஊழியர்களுக்கு 8 மாதமாக வழங்கப்படாமல் இருந்த சம்பளத்தை நாங்கள் வழங்கியதுடன், பணி நிரந்தரமும் செய்தோம். முதல்வர் : அதே தலைமைச் செயலர் உத்தரவு பெற்றுதான் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கூட்டுறவு நிறுவனங்களில் 50 பேர் வரை வேலைக்கு வைக்கலாம். ஒரே சமயத்தில் 1000 பேரை வேலைக்கு வைக்க முடியுமா. பாப்ஸ்கோ நிறுவனம் 8 கோடி, பாசிக் 26 கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ளது. அதிகப்படியான ஊழியர்களை வேலைக்கு வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா. யாரையும் வேலையை விட்டு நீக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வழங்க வழிவகை செய்யப்படும். நகரப் பகுதியில் துப்புரவு பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு நாளைக்கு 5 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் தருகிறோம். அதே பணியை பாசிக் போன்ற கார்ப்பரேஷன் மூலம் செய்திருந்தால், எத்தனையோ பேருக்கு வேலை கொடுத்திருக்கலாம். நமச்சிவாயம் : பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என கூறியதற்கு நன்றி. முதல்வர்: புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் வேலை தருவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ