புதுச்சேரி தனியார் நிறுவன அதிகாரியை காதல் வலையில் வீழ்த்தி ரூ.6.5 லட்சம் மோசடி
புதுச்சேரி : பேஸ்புக்கில் பெண் தோழி போல் பழகி தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ. 6.5 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த 46 வயது தனியார் நிறுவன அதிகாரி, மனைவியை பிரிந்து வாழ்த்து வருகிறார். அவரிடம் கடந்த 6 மாதங்களுக்குப் முன் பேஸ்புக்கில் கனடா நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். பின்னர், அந்த பெண்ணிடம் தனியார் நிறுவன அதிகாரி தனது வீடு, கார், அலுவலகம் உள்ளிட்ட படங்களை பகிர்ந்துள்ளார். அதேபோல், அந்த பெண்ணும் தன்னை பணக்கார வீட்டு பெண் போன்று விலை உயர்ந்த பொருட்களை போட்டோ எடுத்து அனுப்பியதால், இருவருக்கு பேஸ்புக் வலைதளத்திலேயே நெருங்கி பழகி வந்துள்ளனர்.இதையடுத்து, அந்தப் பெண் தனியார் நிறுவன அதிகாரியை காதலிப்பதாக கூறி 20 சவரன் தங்கச்செயின், வாட்ச், வாசனை திரவியங்கள் போன்றவற்றை பரிசாக அனுப்பி வைக்கிறேன் என கூறியதுடன், அதனை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து அனுப்பி உள்ளார்.அதன்பின், தனியார் நிறுவன அதிகாரிக்கு இந்தியா கஸ்டம்ஸ் மற்றும் பெடெஸ் கூரியர் நிறுவனத்தில் இருந்தும் உங்களுடைய பொருள் எங்களுடைய கூரியர் சர்வீசில் உள்ளது. நீங்கள் கஸ்டம்ஸில் பணத்தைக் கட்டி கிளியர் செய்தால் மட்டுமே உங்களுக்கு அனுப்பி வைக்க முடியும் என்று பேசியுள்ளனர்.இதனால், பொருள் வந்தது உண்மை என நம்பிய தனியார் நிறுவன அதிகாரி 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மர்மநபர்கள் தெரிவித்த வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால், பல நாட்களாகியும் கூரியர் ஏதுவும் வரவில்லை.மேலும், அந்த பெண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை ஏமாந்தது தெரியவந்தது.புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், இதுபோன்ற மோசடிகளில் பெரும்பாலும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர்களே ஈடுபடுகின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக 20க்கும் மேற்பட்ட புகார்கள் புதுச்சேரியில் பெறப்பட்டு, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இரண்டு நபர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகையால், இதுபோன்று வெளிநாட்டில் இருந்து விலை உயர்ந்த பொருட்கள் வந்துள்ளது, வெளிநாட்டு வேலை வாய்ப்பு போன்றவற்றை நம்பி பணம் செலுத்த வேண்டாம்.