| ADDED : செப் 09, 2026 06:53 PM
ஸ்கேட்டிங் வீல் சுழலும் சத்தத்துலதான் என்னோட ஒவ்வொரு நாளுமே தொடங்குது... முகமெல்லாம் புன்னகையோடு, கண்களில் உலகச் சாம்பியன்ஷிப் கனவுகளோடு பேசத் தொடங்குகிறார் புதுச்சேரியின் பெருமை விஷ்ணு பிரசாத். அடுத்த மாதம் பராகுவேயில் நடக்கவிருக்கும் உலக ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணியின் சார்பில் தேர்வாகி, புதுச்சேரி மண்ணுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் இந்தச் இளம் சிங்கக்குட்டி. அதுமட்டுமில்லங்க... உலகச் சாம்பியன்ஷிப் மேடைக்குத் தேர்வான புதுச்சேரியின் முதல் சீனியர் ஆண் ஸ்கேட்டிங் வீரர் என்ற வரலாற்றுச் சாதனைக்கும் சொந்தக்காரர் இவர்தான் அவரோடு ஒரு சுடச்சுட நேர்காணல்: உலகச் சாம்பியன்ஷிப் இந்திய அணியில் இடம் பிடிச்சிருக்கீங்க... இந்தத் தருணத்துல மனநிலை எப்படி இருக்கு.. ரொம்பவே மகிழ்ச்சியாவும், பெருமையாவும் இருக்குங்க. ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 2 வரை நொய்டாவில் நடந்த தேசிய அளவிலான தேர்வுப் போட்டிகள் சாதாரண விஷயமே இல்லை. கடுமையான போட்டி... அதுல சீனியர் ஆண்கள் பிரிவில் 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம்னு 4 பதக்கங்களை அள்ளிட்டு வந்தப்போ கிடைச்ச திருப்தி இருக்கே... அதை வார்த்தையால சொல்ல முடியாது. பராகுவேயில் இந்திய தேசியக் கொடியை ஏந்தி நிற்கப் போற அந்த நொடிக்காகக் காத்துட்டு இருக்கேன். இந்தத் தகுதிச் சுற்றுப் போட்டிக்கு தேர்வு பெறவே ரொம்பக் கடுமையான விதிமுறைகள் இருந்ததா கேள்விப்பட்டோமே? ஆமாங்க, அதுதான் இதோட ஸ்பெஷலே. இந்திய ரோலர் ஸ்கேட்டிங் கூட்டமைப்பு வச்ச தகுதி வரம்பு ரொம்பவே டப். தேசிய அளவிலான போட்டிகள்ல ஜூனியர் மற்றும் சீனியர்னு ரெண்டு பிரிவிலுமே பதக்கம் வென்றவங்களால மட்டும்தான் இந்தத் தேர்வுப் போட்டியிலேயே அடியெடுத்து வைக்க முடியும். அந்தத் தடையையெல்லாம் தாண்டி, நொய்டாவிலும் ஜெயிக்க முடிஞ்சது எனக்குக் கிடைச்ச பெரிய அங்கீகாரம். இந்த வரலாற்றுச் சாதனைக்கு பின்னாடி இருக்கும் உழைப்பைப் பத்தி சொல்லுங்களேன்? இது ஏதோ ஒரே நாள்ல கிடைச்ச வெளிச்சம் இல்லைங்க. 14 வருஷ காலக் கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு, அப்புறம் வேர்வை. அதிகாலைப் பயிற்சி, உடற்பயிற்சிக் கூடம்னு என்னோட வாழ்க்கையே இந்த வீல்ஸ் மேலதான் ஓடிட்டு இருக்கு. இந்த வெற்றியில உங்களோட தூண்களா யாரையெல்லாம் சொல்ல விரும்புறீங்க? கண்டிப்பா ரெண்டு பேரைச் சொல்லியே ஆகணும். ஒன்னு, எனக்கு உயர்தரப் பயிற்சியளித்த ஜெய் ஹிந்துஸ்தான் ரோலர் ஸ்கேட்டிங் கிளப். இன்னொன்னு, கடந்த பத்து வருஷத்துக்கும் மேலா என்னைச் செதுக்கி, ஒரு சாம்பியனா மாத்திய என்னோட கோச் ராஜ்குமார் சார். அவரோட வழிகாட்டலும், இந்திய ரோலர் ஸ்கேட்டிங் கூட்டமைப்பின் ஆதரவும் இல்லனா நான் இந்த இடத்துல நின்னிருக்க முடியாது. அடுத்து பராகுவே உலகக் கோப்பை... என்ன பிளான்? இலக்கு ஒன்றுதான்... பராகுவே உலக மேடையில் இந்திய தேசியக் கொடியைப் பறக்க விடணும். புதுச்சேரி மண்ணோட பெருமையை உலகறியச் செய்யணும். தீவிரப் பயிற்சியில் இருக்கேன்... கண்டிப்பா பதக்கத்தோடு தாயகம் திரும்புவேன். 14 ஆண்டு கால உழைப்பு, கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறக்கும் வேகம், தாய்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் தாகம்... விஷ்ணு பிரசாத்தின் இந்த வரலாற்றுச் சாதனைப் பயணம் பராகுவேயிலும் தங்கம் வெல்ல வாழ்த்துகள் சொல்லுவோம்.