புதுச்சேரி சுற்றுலாத்துறை - பிரான்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை, பிரான்ஸ் நாட்டில் உள்ள சென்ட்ரல் வால் தி லோயர் மாகாணம் இடையில் - கலாசாரப் பரிமாற்றம், கல்வி மற்றும் ஆராய்ச்சி, வேளாண்மை மற்றும் உணவுத்துறை மேலாண்மை, இந்தோ - பிரெஞ்சு கூட்டுறவு, உணவு மற்றும் பாரம்பரியம் சார்ந்த திருவிழா கொண்டாட்டங்கள் மற்றும் சுற்றுலா மேம்பாடு ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தம் கவர்னர் கைலாஷ்நாதன் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி அரசு சார்பில் தலைமை செயலர் சரத் சவுகான், சுற்றுலாத்துறை செயலர் மணிகண்டன், சுற்றுலாத்துறை இயக்குனர் முரளிதரன் ஆகியோர் பங்கேற்றனர். பிரெஞ்சு அரசு சார்பில், இந்தியாவிற்கான பிரெஞ்சு துாதர் தியரி மது, சென்னை மற்றும் புதுச்சேரிக்கான துணைத் துாதர் எத்தியன் ரோலான் பியெக், திட்ட அதிகாரி லுலா பஸ்கி ஆகியோர் பங்கேற்றனர். சென்ட்ரல் வால் தி லோயர் மாகாணத்தின் கலாசாரம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான தலைவர் காணொலி வாயிலாக பங்கேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரியமான நட்புறவு வலுப் படுவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேம்பட்டு, இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் மேலோங்கும். நிலையான வளர்ச்சி ஏற்படும். மேலும் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் கலாசார குழுக்கள் பரிவர்த்தனை மற்றும் சுற்றுலா மேம்பாட்டிற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.