குப்பை சேகரிக்க கியூ ஆர் கோடு சேவை முதல் நாளிலேயே பல் இளித்த அவலம்
பாகூர் கொம்யூனில், ஹெச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனம் மூலமாக, வீடுகள் தோறும் குப்பைகள் சேகரிப்பை உறுதி செய்யும் வண்ணம் வழங்கப்பட்ட கியூ ஆர் கோடு சேவை, முதல் நாளில் இருந்தே முடங்கி கிடக்கிறது.புதுச்சேரி உள்ளாட்சி துறை சார்பில், கிராமப்புறங்களில் ஹெச்.ஆர்.ஸ்கொயர் என்ற தனியார் நிறுவனம் மூலம் குப்பைகள் சேகரிக்கும் பணி கடந்த 2023ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த டன் ஒன்றுக்கு 2,987 ரூபாய் வரை ஹெச். ஆர். ஸ்கொயர் நிறுவனத்திற்கு அரசு வழங்கி வருகிறது. ஆனால், முறையாக குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தப்படாமல் கிராமம் முழுதும் குப்பை மேடாக மாறி, துர்நாற்றம் வீசி சுகாதாரசீர் கேட்டினை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி, பாகூர் கொம்யூன் முழுதும் வீடுகள் தோறும் குப்பைகள் சேகரிப்பை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக கியூ ஆர் கோடு வழங்கும் பணியை ஆணையர் சதாசிவம் சேலியமேட்டில் துவக்கி வைத்தார்.வீடுகளில் கியூ ஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இந்த புதிய சேவையை துவங்கிய முதல் நாளிலேயே பல் இளித்து விட்டது. இரண்டு நாட்கள் கடந்து விட்ட நிலையில், இதுவரை கியூ ஆர் கோடு பொருத்திய வீடுகளில் குப்பைகள் சேகரிக்கப்படவில்லை.இது குறித்து டோல் பிரி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க முயன்றால், அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே, இந்த நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. குப்பைகள் எடை குறைவாக இருப்பதால், சாலையோரம் கிடக்கும் மண், கல் போன்ற குவியலை அள்ளி குப்பையாக கணக்கு காட்டி அரசை ஏமாற்றி பல கோடி ரூபாய் வருவாயாக ஈட்டி உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.இது தொடர்பாக விசாரணை நடத்திடவும், இந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து மீண்டும் நல்லதொரு நிறுவனத்திடம் குப்பைகள் சேகரிப்பு பணியை ஒப்படைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.