ரேஷன் கடை ஊழியர் மாயம்
பாகூர்: கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் வீரமணி 41; புதுச்சேரி கூட்டுறவுத் துறை ரேஷன் கடையில் ஊழியர். இவருக்கு வச்சலா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 17ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற வீரமணி இது வரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. ரேஷன் கடையில் ஊழியராக வேலை செய்து வரும் வீரமணிக்கு சரிவர முறையான சம்பளம் வழங்கப்படாமல் இருந்து வருவதால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. விரக்தியில் இருந்து வந்த வீரமணி காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனர்.