கடந்த வாரம் வரை, உடலில் சக்தியை பெருக்கி சமநிலை அடையும் 'லோம விலோம' பயிற்சிகளை பார்த்தோம். இனி, தளர்வு நிலைப் பயிற்சிகள் குறித்த முன்னுரையை இந்த வாரம் பார்ப்போம். யோகம் என்பது ஒரு முழுமை வாய்ந்த விஞ்ஞானம். வாழ்வில், அனைத்து நிலைகளையும், அங்கங்களையும் மனதில் கொண்டு, நம்மை சுறுசுறுப்பாக செயலாற்ற வைத்து தளர்வு நிலையில் ஓய்வும் அளிக்கிறது. கடின உழைப்பிற்கு பின் நம் உடலுக்கு கட்டாயமாக ஓய்வு தேவை. நம் உடல், மனம், உணர்வுகள் அனைத்து செயல்பாட்டில் இருந்து முழுமையாக இளைப்பாறுவது அவசியம். இந்த ஓய்வு நிலையை அடைய யோகத்தின் மூலம் சில யுக்திகளை கையாண்டு தளர்வு நிலை பெறலாம். உடலின் வேகத்தைக் கூட்டி , சுறுசுறுப்பாக செயல்பட வைப்பதோ அல்லது உணர்வுகளை துாண்டுவதோ எளிதாக செய்யக்கூடியதாகும். ஆனால், உடலின் செயல்பாடுகளைக் குறைப்பது என்பது சற்று கடினமானது. உணர்வுகளில் வசப்படுவது என்பதும், அதன் தாக்கத்தில் இருந்து மீள்வது என்பதும் வெவ்வேறானவை. இந்த வேற்றுமை நமது அன்றாட வாழ்வை பாதிக்கும்படி இருந்தால் அது நம் அனைவருக்கும் கவலை தரக்கூடிய ஒன்றாகும். எந்த ஒரு செயலையும், அச்செயலுக்காக செய்கிறோம் என்பது தவறானது மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடியது. அதே செயலை நம் உடல், மனம், உணர்வு இவற்றின் ஒத்துழைப்புடன், இவற்றின் நேர்மின் ஆற்றலுடன் செயல்படுத்தினால், அது நம் உடலுக்கு நல்ல பலன்களை தரும். கட்டுப்பாடில்லாத உணர்வுகள் நமக்கு தீமையே விளைவிக்கும். நம் உடல், மனம், உணர்வு இவற்றின் மீது ஆளுமை நாம் பெற்றால் அது நம் ஆன்மாவின் வளர்ச்சிக்கு பேருதவி புரியும். இந்த கட்டுப்பாடு தியானத்திற்கும், மனதை ஒருநிலையில் வைப்பதற்கும் மிகவும் அவசியம். இவ்வகையான தேடல்கள் நம் வாழ்விற்கு அவசியமாகிறது. ஆரோக்கியமான வாழ்வு, மகிழ்ச்சியான சுற்றுச்சூழல்கள், அமைதியான மனம் இவைகளை பெறுவதே நம் வாழ்வின் இலக்காக இருக்க வேண்டும். கடின உழைப்பிற்குப்பின் உடல் உறைந்து போவதை தடுப்பது அவசியம். கடின உழைப்பிற்கு பின் தோன்றும் வியர்வையை பருத்தியால் ஆன மென்மையான துணியால் துடைத்துவிட வேண்டும். கடின உழைப்பினால் உடலில் தோன்றும் வெப்பத்தை தணிக்க, உடலின் மேற்பரப்பில் உள்ள துவாரங்கள் திறந்து, உஷ்ணத்தை குறைக்கும். பிராணாயாமம், மூச்சுப்பயிற்சி, உடல் நீட்டப்படும் ஆசனங்கள் மற்றும் சில யோக கிரியைகள் சிறந்த பயிற்சிகளாகும். உடல் குளிர்ந்து அமைதிப்படுவதைவிட, உணர்வுகள் அடக்கி அமைதிப்படுத்துவது சற்று கடினமானது. மனதையும், உணர்வுகளைக் காட்டிலும், உடலின் எதிர்த்தாக்கம் மிகவும் வேகமாக இருக்கும். மனவருத்தங்கள், மனச்சுமை போன்றவை நரம்பு மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதற்கு மேலாக சோர்வான, செயலற்ற உடலை தளர்வூட்டி புதுப்பிக்க இது தடங்கலாக இருக்கும். மன அழுத்தங்கள், மனச்சுமை போன்றவற்றை சிறுசிறு விளையாட்டுகள் அல்லது உடற்பயிற்சிகள் மூலம் சரிப்படுத்திவிடலாம். அவரவர்களுக்கு ஏற்ப படிப்படியாக, பொறுமையாக பழக வேண்டும். இதற்கென்று கோட்பாடுகள் எதும் இல்லை. பழகப்பழக அவரவர் உடலுக்கேற்ப யுக்திகளை கையாளலாம். இவ்வாறு ஓய்வு அல்லது தளர்வு நிலை பெற ராஜ யோகம் மற்றும் ஞான யோகத்தில் கிரியைகள் உள்ளன. இவை அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய எளிய மற்றும் பயனுள்ளனவாகும். யோகத்தின் ஓய்வு நிலை அடுத்த வாரம் முதல் பார்ப்போம்....