3.54 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு விரைவில் நிவாரணம்: நிதித்துறை ஒப்புதலுக்கு கோப்பு அனுப்பிவைப்பு
புதுச்சேரி: மத்திய குழு இருநாள் புதுச்சேரியில் முகாமிட்டு ஆய்வு செய்த நிலையில், புயல் நிவாரணம் கொடுப்பதற்கானபணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.பெஞ்சல் புயல் புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டது. ஒரே நாளில் 48.4 செ.மீ., அளவிற்கு கனமழை கொட்டியதால் நகரை தத்தளிக்க வைத்தது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்து தனித்தீவானது. ராணுவனத்தினர், பேரிடர் குழுவினர், அரசு ஊழியர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். வெள்ளம், கனமழையில் சிக்கில் 5 பேர் உயிரிழந்தனர். மழையால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் தரப்படும்.மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.தொடர்ந்து புதுச்சேரி அரசின் வேண்டுகோளின்படி, புயல், கனமழையால் பாதித்த புதுச்சேரி பகுதிகளை மத்திய குழுவினர் நேற்று முன்தினம் முதல் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இன்று மத்திய அரசிடம் ஆய்வு அறிக்கை சமர்பிக்க உள்ளனர். மத்திய அரசின் உதவி கிடைக்கும் வரை காத்திருக்காமல் புயல் நிவாரணம் வழங்கும் பணியை புதுச்சேரி அரசு முடுக்கிவிட்டுள்ளது. முதற்கட்டமாக, 3.54 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு புயல் நிவாரணமாக 177 கோடியை பெற நிதிதுறை ஒப்புதலுக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதித் துறையின் ஒப்புதல் கிடைத்ததும் அடுத்த வாரமே அனைவரது வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டு பணிகளை வேகப்படுத்தி வருகின்றது.புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய இடங்களில் பத்தாயிரம் ஹெக்டேர் பரப்பில் பயிர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கு ஹெக்டேருக்கு தலா ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இறந்த மாடுகளுக்கு தலா ரூ.40 ஆயிரம், இறந்த கிடாரி கன்றுகள் தலா ரூ. 20 ஆயிரமும் தரப்பட உள்ளது. சேதமடைந்த படகுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம், சேதமடைந்த 15 கூரைவீடுகள் கட்ட தலா ரூ.20 ஆயிரம், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு தலா பத்து ஆயிரம் தரப்பட என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.