இ.சி.ஆரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
புதுச்சேரி:புதுச்சேரியில் மேம்பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்க மத்திய அமைச்சர் வருவதால் ராஜிவ் சதுக்கம் முதல் லாஸ்பேட்டை ஏர் போர்ட் வரை சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை போக்கும் விதமாக இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை ரூ.436 கோடி ரூபாய் மதிப்பில் 3.8 கிலோ மீட்டர் துாரத்திற்கு புதிய மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேம்பாலம் காட்டுமான பணிக்கு வரும் 13ம் தேதி பூமி பூஜை நடக்கிறது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின்கட்கரி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். மத்திய அமைச்சர் வருகையையொட்டி, புதுச்சேரியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலையை சீரமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராஜிவ் சதுக்கம் முதல் லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை சந்திப்பு வரை இ.சி.ஆரில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை ,நெடுஞ்சாலைகோட்டம் மற்றும் உழவர்கரை நகராட்சி சார்பில், போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், தள்ளுவண்டி, பதாதைகள் மற்றும் கட்டடங்களை அதிரடியாக அகற்றினர். மேலும் மது கடைக்கு செல்ல வாய்க்காலை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த படிகட்டுகளையும் அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.