புதுச்சேரி:இரும்பு ஆலை கழிவுகளில் இருந்து சாலை அமைக்கவும், கட்டுமான பொருட்களை தயாரிப்பதற்கான ஆயத்த பணிகளை மாசுக்கட்டுபாட்டு குழுமம் துவங்க உள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் தொழில் வளர்ச்சியில் இரும்பு ஆலைகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. அதே வேளையில், இந்த ஆலைகளிலிருந்து வெளியேறும் திடக்கழிவுகளை முறையாக கையாள்வது நீண்டகால சவாலாக இருந்து வருகிறது. இந்தச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், அதே சமயம் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் ஒரு முன்னோடித் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இரும்பு ஆலை கழிவுகளை கட்டுமானப் பொருட்களாகவும், சாலைகள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. தொழில்நுட்பம் எப்படி புதுச்சேரி பிராந்தியத் தில் பத்துக்கும் மேற்பட்ட இரும்பு ஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றிலிருந்து நாளொன்றுக்கு சராசரியாக 50 டன் திடக்கழிவுகள் உருவாகின்றன. சிலாக் என்று அழைக்கப்படும் இக்கழிவுகள், இரும்புத் துகள்களும் மணலும் கலந்த கலவையாகும். இதுவரை, இவை தொழிற்சாலை வளாகங்களிலோ, சாலையோரங்களிலோ அல்லது பள்ளங் களை நிரப்பவோ மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனால் நிலம் மற்றும் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. இக்கழிவுகளை வெறும் குப்பைகளாக கருதாமல், கட்டுமான வளமாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை மாசுக் கட்டுப் பாட்டுக் குழுமம் கையிலெடுத்துள்ளது. இரும்பு ஆலை கழிவு மணல் துாளாக்கப்பட்டு, அதில் உள்ள நுண்ணிய இரும்புத் துகள்கள் சக்திவாய்ந்த காந்தங்கள் மூலம் தனியாகப் பிரிக்கப்படும். எஞ்சியிருக்கும் உறுதியான மணல், தரமான கட்டுமானச் செங்கற்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும். மேலும், எம்--சாண்ட் போன்று கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான பூச்சு மணலாகவும், சாலைகள் அமைக்கும் பணிகளிலும் இதைப் பயன்படுத்த முடியும். இந்த முயற்சி வெறும் கழிவு மேலாண்மை மட்டுமல்ல, பல அடுக்கு நன்மைகளைக் கொண்டுள்ளது. இரும்பு ஆலை கழிவுகள் நிலத்திலும் நீர்நிலைகளிலும் தேங்குவது தடுக்கப்படுவதால், நிலத்தடி நீர் மற்றும் மண் வளம் காக்கப்படும். மணல் மற்றும் கட்டுமானக் கற்களுக்காகப் பாறைகளை உடைப்பதும், மணல் எடுப்பதும் குறையும். இதன் மூலம் இயற்கைச் சூழல் சமநிலை பேணப்படும். கழிவுகளைப் பயனுள்ள மூலப்பொருட்க ளாக மாற்றும் இந்த அணுகுமுறை, மற்ற தொழிற் சாலைகளுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமையும் என்பதால் இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த மாசுக்கட்டுபாட்டு குழுமம் திட்டமிட்டுள்ளது. இரும்பு ஆலை கழிவு களைக் கட்டுமானப் பொருட்களாக மாற்றும் இந்த ஆக்கப்பூர்வமான திட்டம், புதுச்சேரியை ஒரு பசுமை நகரமாக மாற்றுவதற்கான முதல் அடியாக அமைய உள்ளது. பொருளாதார முன்னேற்றமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் கைகோர்க்கும் இத்தகைய நடவடிக்கைகள், வருங்காலத் தலைமுறைக்கு நிலையான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்யும் என்பதில் ஐயமில்லை.
உட்கட்டமைப்பிற்கு உதவும்
இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதில் மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. ஆய்வு கூட்டமும் நடத்தியது. இது குறித்துக் குழுவின் உறுப்பினர் செயலர் ரமேஷ் கூறுகையில், 'புதுச்சேரி இரும்பு ஆலைகள் கழிவு மேலாண்மையில் புதிய மைல்கல்லை எட்ட உள்ளன. தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு துறை வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டங்களில் பெறப்பட்ட கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. வரும் காலங்களில், இரும்பு ஆலை தொழிற்சாலைக் கழிவுகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ஆதாரமாக விளங்கும், என்று நம்பிக்கை தெரிவித்தார். இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் பொறியாளர் தேவநாதன், தொழில்நுட்ப ஆலோசகர் இளமதி, சுற்றுச்சூழல் துறை இளநிலை பொறியாளர் பிரபு புகழேந்தி மற்றும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சம்பத் ஆகியோர் பங்கேற்று தங்கள் ஆலோசனைகளை வழங்கினர்.