ரோபோ மூலம் போக்குவரத்து விழிப்புணர்வு
புதுச்சேரி: புதுச்சேரி வடக்கு போக்குவரத்து போலீசார் கார் ரோபோ உதவியுடன் சாலை விபத்துகளைத் தடுக்கவும், வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ராஜீவ்காந்தி சிக்னலில் நடந்தது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து மற்றும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சீனியர் எஸ்.பி. திவ்யா உத்தரவின் பேரில், எஸ்.பி. ரச்சனா சிங், இன்ஸ்பெக்டர் வேலையன் தலைமையிலான போக்குவரத்து போலீசார் இன்று இரவு ராஜீவ் காந்தி சிக்னலில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். இதில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கார் ரோபோ பயன்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு வணக்கம் தெரிவித்தும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியின் போது போலீசார் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கி அதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர். வழக்கமான சோதனைகளைப் போல் அல்லாமல், கார் ரோபோ மூலம் நடத்தப்பட்ட இந்த நுாதன முயற்சி அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.