ரூ. 1.62 கோடி பயிர் உற்பத்தி ஊக்கத் தொகை வழங்கல்
புதுச்சேரி: ஒரு கோடியே 62 லட்சத்து 5 ஆயிரத்து 790 ரூபாய் பயிர் உற்பத்தி ஊக்க தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. வேளாண் துறை செய்திக்குறிப்பு; வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் மூலமாக, பயிர்கள் சாகுபடியினை ஊக்குவிக்கவும், விவசாயிகள் பயிர் சாகுபடியில் முதலீடு செய்யும் இடுபொருட்கள் மற்றும் இதர பண்ணை செலவினங்களை சற்றே ஈடுகட்டவும், பயிர் உற்பத்தி தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் பல்வேறு உட்பிரிவுகளில் விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த நவரைப் பருவத்தில், நெல்பயிர் சாகுபடி செய்த புதுச்சேரி பகுதி யினை சேர்ந்த 1,770 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு ஒரு கோடியே 32 லட்சத்து 80 ஆயிரத்த 940 ரூபாய் பயிர் உற்பத்தி ஊக்கத்தொகையும், கடந்த ரபி பருவத்தில் எள் பயிர் சாகுபடி செய்த 328 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு, பயிர் உற்பத்தி ஊக்கத் தொகையாக 22 லட்சத்து 24 ஆயிரத்து 850 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இனி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலம் விடுவிக்கப்படும் அனைத்து ஊக்கத்தொகை மற்றும் மானியங்களும் மத்திய அரசு அறிவுறுத்துள்ள ஆதார் சார்ந்த நேரடிப் பணப்பட்டுவாடா வழியாக தொடரும். கடந்த நவரைப் பருவத்தில் நெற்பயிர் மற்றும் ரபி பருவத்தில் எள் பயிர் சாகுபடி செய்த அட்டவணை பிரிவு விவசாயிகளுக்குண்டான ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.