புதுச்சேரியில் பெஞ்சல் புயல் நிவாரணம் விவசாயிகளுக்கு ரூ. 24.10 கோடி வழங்கல்
புதுச்சேரி: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 12 ஆயிரம் வீதம், 12,955 விவசாயிகளுக்கு அவரது வங்கி கணக்கு மூலம் ரூ. 24.10 கோடி பணம் நேற்று செலுத்தப்பட்டது.புதுச்சேரியில் பெஞ்சல் புயல் மற்றும் மழை காரணமாக கிராம் மற்றும் நகரில் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அடுத்த சில நாட்களில் சாத்தனுார், வீடூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால், சங்கராபரணி, தென்பெண்ணையாறு கரையோர கிராமங்கள் வெள்ளநீர் சூழ்ந்தது.வெள்ள பாதிப்பு காரணமாக, புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்பத்திற்கும் தலா 5,000 நிவாரண தொகை அரசு வழங்கியது. தொடர்ந்து, புயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு எக்டேருக்கு ரூ. 30 ஆயிரம் (ஏக்கருக்கு ரூ. 12 ஆயிரம்)வழங்கப்படும் என அரசு அறிவித்தது. முதற்கட்டமாக கடந்த 6ம் தேதி, ஏனாமில் 199 பயனாளிகளுக்கு 24.6 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டது.தொடர்ந்து, புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று சட்டசபையில் நடந்தது. விவசாயிகளுக்கான நிவாரண தொகை காசோலையை முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில், வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இதன் மூலம் காரைக்கால் மாவட்டத்தில் 5,020 விவசாயிகளுக்கு ரூ. 11.64 கோடி, புதுச்சேரி விவசாயிகள் 7,736 பேருக்கு ரூ. 12.12 கோடி என மொத்தம் 12,955 விவசாயிகளின் பயிர் பாதிப்புக்கான நிவராண தொகையாக 24 கோடியே 10 லட்சத்து 80 ஆயிரத்து 400 ரூபாய், விவசாயிகளின் வங்கி கணக்கில் நேற்று செலுத்தப்பட்டது.