மருத்துவ கல்லுாரியில் சீட்டு வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி
புதுச்சேரி: மருத்துவக் கல்லுாரியில் சீட்டு வாங்கி தருவதாக கூறி புதுச்சேரி வாலிபரிடம் ரூ.40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரியை சேர்ந்தவர் கார்த்திகேயன். மருத்துவ கல்லுாரியில் சீட்டு தொடர்பாக ஆன்லைனில் தேடியுள்ளார். அப்போது, வந்த விளம்பரத்தை பார்த்து, அதில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டார்.எதிர்முனையில் பேசிய நபர் தனது பெயர் வெங்கடேசன் எனவும், உங்களுக்கு தேவையான மருத்துவக் கல்லுாரியில் சீட்டு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். மேலும், மருத்துவ கல்லுாரி சீட்டை உறுதிப்படுத்த முன்பணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதைநம்பிய கார்த்திகேயன், அவர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ரூ. 40 லட்சம் அனுப்பியுள்ளார். அதன்பின், கார்த்திகேயனால் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது கார்த்திகேயனுக்கு தெரியவந்தது.இதுகுறித்து கார்த்திகேயன் இ-மெயில் மூலம் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரை பெற்ற சைபர் கிரைம் போலீசார்,இச்சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளிக்கும்படி, கார்த்திகேயனுக்கு பரிந்துரை செய்தனர்.