ஜூஸ் கடையில் திருட்டு சேலம் வாலிபர் கைது
திருபுவனை : திருபுவனை அருகே ஜூஸ் கடையில் பூட்டை உடைத்து ரூ.2 ஆயிரம் திருடிய வழக்கில் சேலத்தை சேர்ந்த பிரபல திருடனை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, அரியூர், அனந்தபுரம் ரோடு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சங்கர் மகன் சதீஷ்குமார் 29; திருவண்டார்கோவில் பெட்ரோல் பங்க் அருகில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 22ம் தேதி இரவு 10:30 மணிக்கு தனது கடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள்வந்து பார்த்த போது கடையின் ஷட்டர் கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே டேபிள் டிராயரில் இருந்த ரூ. 2 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. புகாரின் பேரில் திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில், சேலம் மாவட்டம், சினிமா நகர், சின்ன ஏரி வயக்காடு, பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் பாண்டியன் 35; என்பவர் கடையில் திருடியது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, ஒரு பைக் மற்றும் பூட்டை உடைப்பதற்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இவர் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏழுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவரை கோர்ட்டில் ஆரஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.