புதுச்சேரி: புதுச்சேரியில் லாஸ்பேட்டை, சேதராப்பட்டு பகுதிகள் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் 10 ஆண்டிற்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகின்றது. அதன்படி கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்டது. இதையடுத்து 2021 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி இருக்க வேண்டும். ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் கைவிடப்பட்டது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பிப்ரவரியில் நடக்கும் என மத்திய அரசு அறிவித்து அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்னோட்டமாக வரும் நவம்பர் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. புதுச்சேரியில் இந்த மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு லாஸ்பேட்டை, சேதராப்பட்டு கிராமத்தில் நடக்கின்றது. லாஸ்பேட்டையில் உழவர்கரை தாசில்தார் செந்தில்குமார் தலைமையிலும், சேதராப்பட்டில் வில்லியனுார் தாசில்தார் சேகர் தலைமையில் இந்த மாதிரி கணக்கெடுப்பு நடத்தப்படுகின்றது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை அதிகாரிகள் மேற்பார்வையிடுகின்றனர். மாதிரி கணக்கெடுப்பு பணியை எளிமைப்படுத்தும் வகையில் நவ., 1 முதல் 7 ம் தேதி வரை இப்பகுதிகளில் உள்ள மக்கள் தாங்களாகவே முன் வந்து தங்களது சுய விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், மக்கள் தொகை கணக்கெடுப்பு, காகித முறையில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், நடப்பாண்டு முதல் முறையாக டிஜிட்டல் முறையில் நடைபெற உள்ளது. இதற்காக, மத்திய அரசு, டி.எல்.எம்., மற்றும் எச்.எல்.ஓ., என்ற இரண்டு செயலிகளை உருவாக்கி உள்ளது. இதில், 'டி.எல்.எம்.,' எனும் டிஜிட்டல் லொக்கேட்டிங் மேப்' செயலி வழியே, கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள வேண்டிய இடம் விபரம், களப்பணியாளர்களுக்கு வழங்கப்படும். எச்.எல்.ஓ., என்ற, ஹவுஸ் லிஸ்டிங் ஆப்ரேஷன்' செயலி வழியே, வீடுகள் கணக்கெடுப்பு பணி, சுயவிபரங்கள் சேகரிப்பு நடைபெற உள்ளது. இதேபோல், இந்திய தேர்தல் ஆணையம் நவ., 4 முதல் சிறப்பு வாக்காளர் திருத்த முகாமை புதுச்சேரியில் நடத்த உள்ளது. இந்த பணியும் லாஸ்பேட்டை, சேதாராப்பட்டு பகுதியில் நடக்க உள்ளது. இரண்டும் வெவ்வேறு சிறப்பு பணிகள். எனவே, இப்பணிகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளும், வருவாய் துறை அதிகாரிகளும் தெரிவித்தனர்.