| ADDED : டிச 26, 2025 05:39 AM
புதுச்சேரி: சஞ்சீவிநகரில் விரைவில் கழிவுநீர் வாய்க்கால் அமைத்து தருவதாக தொகுதி எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் உறுதி அளித்துள்ளார். காலாப்பட்டு தொகுதியில் உள்ள சஞ்சீவிநகர் அனைத்து தெருக்களின் சாலைகளும் பழுதடைந்து இருந்தது. இதையடுத்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., முயற்சியால், சஞ்சீவிநகர், புதுநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று அவர், சஞ்சீவிநகர் பகுதி மக்களுக்கு காலண்டர் வழங்கினார். அப்போது, சிமென்ட் சாலை வசதியை ஏற்படுத்தி தந்த அவருக்கு நன்றி தெரிவித்த மக்கள், கழிவு நீர்வாய்க்கால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். புதுச்சேரியில் இருந்து குயிலாப்பாளையம், இடையஞ்சாவடி வழியாக இயக்கப்படும் பி.ஆர்.டி.சி.,பஸ்கள் ஆலங்குப்பம் வரை வந்து செல்வதால் சஞ்சீவிநகர் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, தங்கள் கிராமம் வரை பி.ஆர்.டி.சி., பஸ் வந்து செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். அதனை கேட்டறிந்த எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ., அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் தங்கள் கிராமத்திற்கும் பி.ஆர்.டி.சி., பஸ் வந்து செல்வதற்கு ரூட் ஏற்படுத்தி தருவதாகவும், சிமென்ட் சாலை அமைக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை துவங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். நிகழ்ச்சியில் பா.ஜ., நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.