மேலும் செய்திகள்
ஐயப்பசுவாமிக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை
11 minutes ago
புதுச்சேரி : புதுச்சேரி கோபாலன்கடை ஸ்ரீலட்சுமி நரசிம்மர் நகரில், ஸ்ரீசத்ய சாய் சேவா மையம் இன்று திறக்கப்படுகிறது. புதுச்சேரியில் லாஸ்பேட்டை குறிஞ்சி நகர், ஜிப்மர், தேங்காய்த்திட்டு, மோகன் நகர், புதுச்சேரி நகரம் ஆகிய ஐந்து இடங்களில் சத்ய சாய் சமிதிகள் உள்ளன. இதுமட்டுமின்றி, அடுத்த நிலையில் ஐந்து இடங்களில் சத்ய சாய் பஜனை மண்டலிகள் செயல்படுகின்றன. அடுத்தக்கட்டமாக, மாவட்ட அளவில் சத்ய சாய் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு சத்ய சாய் அறக்கட்டளை மற்றும் சத்ய சாய் சேவா நிறுவனங்கள் தமிழ்நாடு வடக்கு மற்றும் புதுச்சேரி மாவட்டம் சார்பில், புதுச்சேரி கோபாலன்கடை ஸ்ரீலட்சுமி நரசிம்மர் நகரில் 'சாய் கிருஷ்ணா' என் பெயரில் ஸ்ரீசத்ய சாய் சேவா மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று (21ம் தேதி) காலை 9:00 மணிக்கு நடக்கிறது. திறப்பு விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் தேனீ ஜெயக்குமார், சாய்சரவணன்குமார், சத்ய சாய் மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.தொடர்ந்து, ஸ்ரீசத்ய சாய் சேவா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள திறன் மேம்பாட்டு பயிற்சி மையமும் திறந்து வைக்கப்பட உள்ளது. சிறப்பு பூஜைகள்
முன்னதாக, அதிகாலை 4:30 மணிக்கு கோ பூஜை, கணபதி பூஜை, காலை 6:00 மணிக்கு கணபதி, வாஸ்து, நவக்கிரக, சாய் காய்த்ரி ேஹாமங்கள், 8:30 மணிக்கு பஜனை நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு மகாமங்கள ஆர்த்தியும், தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளது.மாலை 5:00 மணிக்கு பாலவிகாஸ் மாணவர்களின் பஜனையும், கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். என்ன சிறப்பு?
தரைத் தளம் மற்றும் முதல் தளம் கொண்ட, ஸ்ரீசத்ய சாய் சேவா மைய கட்டடம் நேர்த்தியாக வடிமைக்கப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் சத்ய சாய் நிகழ்ச்சிகளும், முதல் தளத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது.குறிப்பாக, ஏழ்மை நிலையில் உள்ள மகளிருக்கு தையல், ஆரி ஒர்க் உள்ளிட்ட தொழிற்பயிற்சிகளை அளித்து அவர்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற்கு வாழ்வாதாரத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் சர்வமத விழாக்களும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை, தமிழ்நாடு சத்ய சாய் அறக்கட்டளை மற்றும் இந்திய சத்ய சாய் சேவா நிறுவனங்கள் தமிழ்நாடு வடக்கு மற்றும் புதுச்சேரி மாவட்டம் இணைந்து செய்துள்ளன.
11 minutes ago