உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூர் கிராமங்களில் இ - ஆட்டோ சேவை செந்தில்குமார் எம்.எல்.ஏ., கோரிக்கை

பாகூர் கிராமங்களில் இ - ஆட்டோ சேவை செந்தில்குமார் எம்.எல்.ஏ., கோரிக்கை

புதுச்சேரி: சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்:செந்தில்குமார் (தி.மு.க.,): புதுச்சேரியில் இருந்து பரிக்கல்பட்டு வரை ஆராய்ச்சிக்குப்பம் வழித்தடத்தில் இயங்கி வந்த 17-ஏ அரசு பஸ் இயக்கப்படவில்லை. மீண்டும் எப்போது அந்த வழித்தடத்தில் பஸ் இயக்கப்படும். புதுச்சேரி நகர பகுதிகளை இணைக்கும் வகையில் பரிக்கல்பட்டிலிருந்து பாகூருக்கு சுழற்சி முறையில் இலவச டெம்போ அல்லது இ- ஆட்டோ இயக்க வேண்டும்.முதல்வர் ரங்கசாமி: அந்த வழித்தடத்தில் புதிய மினி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.செந்தில்குமார்: அந்த வழித்தடத்தில் பஸ் இயக்கப்படும் என, கூறியிருப்பது எங்களுக்கு நிம்மதியை தரக்கூடிய விஷயமாக உள்ளது. பரிக்கல்பட்டு கிராமம் பாகூர் பகுதியில் இருந்து தனியாக உள்ள பகுதி. அந்த வழித்தடத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாகவே பேருந்து இயக்கப்படவில்லை. பரிக்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், கொம்மந்தான்மேடு கிராமத்திலிருந்து பாகூர் பகுதிக்கு மக்கள் வர வேண்டுமென்றால் 4 கி.மீ., துாரம் வரை நடந்து வந்து புதுச்சேரி உட்பட நகர பகுதிகளுக்கு செல்ல பஸ் ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ஒரு பஸ், நாள் முழுதும் பரிக்கல்பட்டிற்கு வந்து செல்லப்போவதில்லை. அந்த பஸ் நகர பகுதிக்கு வந்து செல்வதற்கு குறைந்தது 2 லிருந்து 3 மணி நேரம் வரை ஆகும். அதனால் பரிக்கல்பட்டு - பாகூர் பகுதியை இணைப்பதற்கு 30 நிமிட இடைவெளியில் அரசு சார்பில் சுழற்சி முறையில் இலவசமாக டெம்போ அல்லது இ- ஆட்டோ இயக்க வேண்டும்.இதற்கு அரசுக்கு பெரிய அளவில் செலவு ஏற்படாது. இதன்மூலம் அந்த பகுதி மக்கள் தங்குதடையின்றி நகர பகுதி செல்ல முடியும். இந்த ஆலோசனையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். முதல்வர் ரங்கசாமி: இந்த ஆலோசனையை பரிசீலனை செய்து, இ -ஆட்டோ இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !