புதுச்சேரியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு: பெண் உட்பட மூவர் பலி: 71 பேர் அட்மிட்
புதுச்சேரி: புதுச்சேரியில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்து 3 பேர் இறந்தனர்; 71 பேர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். புதுச்சேரி நகர பகுதியில் சில மாதங்களாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில், செப்., 5ம் தேதி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன் கோவில் வீதியில் வந்த கலங்கலான குடிநீரை குடித்த, 20க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டது. அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அதே பகுதியில் நேற்று முன்தினம் மேலும் பலர் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில், கோவிந்தசாலை பகத்சிங் வீதி, பூசைமுத்து, 43, காமராஜ் வீதி பார்வதி, 65, பாரதிபுரம் மெயின்ரோடு கோவிந்தசாமி, 70, ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும், அரசு பொது மருத்துவமனையில், 31 பேரும், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 40 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வயிற்றுபோக்கால் மூவர் இறந்த சம்பவத்தால் உருளையன் பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு தொகுதி மக்கள் பீதியடைந்து உள்ளனர். பொதுப்பணித்துறையினர் சம்பவ பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களை ஆய்வு செய்து, அப்பகுதியில் வினியோகிக்கப்பட்ட குடிநீரை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் கூறுகையில், ''இறந்தவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகே, உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். ''மூவர் இறந்த கோவிந்தசாலையில், டாக்டர்கள் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். துாய்மை பணியும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.