எட்டாக்கனியான பதவி உயர்வு; இலவு காத்த கிளியாக ஏங்கும் எஸ்.ஐ.,க்கள்
புதுச்சேரி போலீஸ் துறையில், எஸ்.ஐ., பணியில் சேர்ந்தவர், 5 ஆண்டு பணி முடித்ததும், இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளிக்க வேண்டும். அதன்படி கடந்த 2013ம் ஆண்டு 208 பேருக்கு பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்பட்டது.அதில், தலைமை காவலரில் இருந்து எஸ்.ஐ., பதவி உயர்வு பெற்றவருக்கு, தேர்வில் தேர்ச்சி பெற்ற நாளை தகுதி நாளாக கொள்ளாமல், அடாக் பிரிவில் பதவி உயர்வு அறிவித்த நாளை தகுதி நாளாக கொண்டதற்கு, நேரடியாக எஸ்.ஐ., பணிக்கு வந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த குளறுபடிகளை போலீஸ் தலைமையகம் சரி செய்து, இறுதி சீனியாரிட்டி பட்டியலை வெளியிடாமல், அந்த கோப்பை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது. இதனால், போலீஸ் துறையில் ஒட்டு மொத்த எஸ்.ஐ.,க்களும் பதவி உயர்வு கிடைக்காமல் புலம்பிக் கொண்டுள்ளனர்.குறிப்பாக கடந்த 2011ம் ஆண்டு நேரடியாக எஸ்.ஐ., பணிக்கு வந்தவர்கள் கடந்த 14 ஆண்டாக பதவி உயர்வு இல்லாமல் நொந்து நுாடூல்ஸ் ஆகி வரும் நிலையில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல், அவர்களுடன் போலீஸ் துறையில் கான்ஸ்டபுளாக பணியில் சேர்ந்து இவர்களுக்கு 'சல்யூட்' அடித்தவர்கள், தற்போது பதவி உயர்வு மூலம் எஸ்.ஐ.,க்களாக பணி புரிவது மேலும், வேதனையாக உள்ளதாக புலம்பிக் கொண்டுள்ளனர்.