உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை எம்.எல்.ஏ., முற்றுகையிட்டதால் பரபரப்பு

குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை எம்.எல்.ஏ., முற்றுகையிட்டதால் பரபரப்பு

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதி அரசு குடியிருப்புகளில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை நேரு எம்.எல்.ஏ., முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. உருளையன்பேட்டை தொகுதி, குபேர் நகர் வார்டு, கண்டாக்டர் தோட்டம், பிரியதர்ஷினி நகர், கோவிந்த சாலை அந்தோணியார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள அரசு குடியிருப்புகளில் ஏதேனும் பிரச்னைகள் என்றால் குடிசை மாற்று வாரியம் மூலம் தீர்வு காணப்படும். அதற்காக தான் குடிசை மாற்று வாரியத்திற்கு மாதா மாதம் வாடகை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக அரசு குடியிருப்புகளில் ஏதேனும் பிரச்னை என்றாலும், வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும், வீடு கட்டுவதற்காக வழங்கப்படும் மானிய உதவி தொகைகள் சரியாக வழங்காதது குறித்தும் குடிசை மாற்று வாரியம் கண்டு கொள்வதில்லை. இதனை கண்டித்து நேரு எம்.எல்.ஏ., தலைமையில் கண்டாக்டர் தோட்டம் அரசு குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, முதன்மை செயல் அதிகாரி ரவிச்சந்திரனிடம், அரசு குடியிருப்பு பகுதிகளில் ஏற்படும் பிரச்னைகளை ஏன் சரி செய்ய நடவடிக்கை எடுப்பதில்லை என கேள்வி எழுப்பினர். அதற்கு, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், இனி அரசு குடியிருப்புகளில் ஏற்படும் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். அதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். காங்., பிரமுகர் விநாயகம், எம்.எல்.ஏ.,வின் நேர்முக உதவியாளர் சாய்நாதன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை