வணிகர்களின் எடையளவு இயந்திரங்களுக்கு அரசு முத்திரையிடும் சிறப்பு முகாம்
புதுச்சேரி : சட்டமுறை எடையளவைத்துறை சார்பில் முதலியார்பேட்டை மார்க்கெட் பகுதியில் வணிகர்களின் எடையளவு இயந்திரங்களுக்கு அரசு முத்திரையிட்டு, சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. புதுச்சேரி வணிகர்கள் தங்களுடைய பயன்பாட்டில் உள்ள எடைகள், அளவைகள் மற்றும் எடையளவு இயந்திரங்கம் ஆகியவற்றை உரிய தொகை செலுத்தி அரசாங்க முத்திரையை பதித்து, அதற்குரிய சான்றிதழைப் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சட்டமுறை எடையளவைத்துறை மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வணிகர்கள் வியாபாரம் செய்யும் மையங்களுக்குகே சென்று ஆய்வாளர்கள் மூலம் எடைகள், அளவைகள் மற்றும் எடையளவு இயந்திரங்களை ஆய்வு செய்து முத்திரையிடப்படுகிறது. அதன் ஒருபகுதியாக, முதலியார்பேட்டை மார்க்கெட் பகுதியில் எடைகள், அளவைகள் மற்றும் எடையளவு இயந்திரங்கள் ஆகியவற்றில் முத்திரையிடும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில், அப்பகுதி வணிகர்கள் பங்கேற்று தங்களது பயன்பாட்டில் உள்ள எடையளவு இயந்திரங்களில் அரசு முத்திரை பதிந்து சான்றிதழ் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து, வரும் 26ம் தேதி அரியாங்குப்பம், 28ம் தேதி உழவர் சந்தை, லாஸ்பேட்டை, 30ம் தேதி சின்னக்கடை மார்க்கெட் மற்றும் உழவர்சந்தை ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.