உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய வாக்காளர்களை சேர்க்க சிறப்பு முகாம்

புதிய வாக்காளர்களை சேர்க்க சிறப்பு முகாம்

புதுச்சேரி: புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடக்க உள்ள சூழ்நிலையில், இப்பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களை துறை பணிகளில் இருந்து விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் முதன்முறை வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக அக்டோபர் 1 முதல் 31 வரை சிறப்பு முகாம் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக பணியமர்த்தப்பட்டுள்ள ஓட்டுசாவடி நிலை அலுவலர்களை உடனடியாக விடுவிக்குமாறு அனைத்து அரசுத்துறை தலைவர்களுக்கும் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார். அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 1.10.2026-ஐ தகுதித் தேதியாக கொண்டு வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தச் செயல்பாட்டின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலைத் துல்லியமாக புதுப்பிக்கும் நோக்கில் நடத்தப்படும் இச்சிறப்பு முகாமில், அக்டோபர் 7 முதல் அக்டோபர் 17 வரை அலுவலர்கள் நேரடியாக வீடுகளுக்குச் சென்று சரிபார்க்கும் பணிகளில் ஈடுபடவுள்ளனர். அரசியலமைப்புச் சட்டம் பிரிவு கீழ் வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் ஈடுபடும் அலுவலர்களுக்குத் தேவையான மனிதவளம் மற்றும் உதவிகளை வழங்குவது கட்டாயமாகும். எனவே, இச்சிறப்பு பணிக்கும் பயிற்சி வகுப்புகளுக்கும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் பிற பணியாளர்கள் எவ்வித தடையுமின்றி கலந்துகொள்ளும் வகையில், அவர்களை பணி விடுவிப்பு செய்யுமாறு அரசுத்துறைத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியை மிகவும் அவசரமானதாக கருதி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !